அண்டாகா கசூம்… அபூகா குசூம்…

1
(1)

நேற்றிலிருந்து அடிவயிறு கனத்து தொங்கியது. ஏதோ ஒரு சுமை நிரந்தரமாய் தங்கிவிட்டதைப்போல இருந்தது. ஒரு மரத்துப் போன உணர்வு. இரவில் படுத்திருக்கும்போது வயிற்றைத் தடவிப் பார்த்தான். தசைகளால் உருவாக்கப் பட்டதைப்போலத் தெரியவில்லை. இளக்கமே இல்லாமல், உணர்ச்சியேயின்றி கிண்ணெண்றிருந்தது. தட்டினால் மரத்தில் கொட்டுவதைப்போல ‘டொக் டொக்’கென்று சத்தம் கேட்டது. அவன் பயந்து போனான். உயிர்ப்பயம் ஒருவித வினோத வலியை உடலில் கிளர்த்தியது. அந்த வலி மேல்வயிற்றில் வந்து மையம் கொண்டு விட்டது. ஆனால் தொப்புளுக்குக் கீழே எந்த அணக்கமும் இல்லை. அப்படியே கல்லைக் கட்டித் தொங்க விட்டமாதிரி. சாப்பிடுகிற சாப்பாடு எங்கேதான் போகிறதோ என்னதான் ஆகிறதோ, ஆனால் சிறுகச் சிறுக இன்னொரு மாற்றமும் நிகழ்ந்துகொண்டு வருவதை அவன் கவனித்துக் கொண்டிருந்தான். பசி தன் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வந்தது.

இதையெல்லாம் வாசிக்கும் உங்களுக்கு என்ன காரணம் என்று தெரிந்திருக்கும். மலச்சிக்கல்தானேய்யா என்று ஒரு வார்த்தையால் போட்டுத் தாக்குகிற உங்களைப் போன்றவர் அல்ல என்னிடம் இந்தக் கதையைச் சொன்ன நண்பர். இது போன்ற விஷயங்களை மூன்றாவது மனிதரிடம் சொல்லுவதில் மிகுந்த கூச்சமுடையவராக இருந்தார். அவர் கதை சொல்லும் பீடிகையைக் கண்டு நானும் உங்களைப் போலவே குழம்பிப் போனேன். ஏதோ மிகக் கொடிய வியாதி பீடித்த இளைஞரைப் பற்றிய கதை இது என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் முழுவதுமாகச் சொல்லி முடித்த பிறகு அவர் மீது அனுதாபம் வந்தது. உங்களைப் போலவே, அவர் சொல்லச் சொல்ல ஒருவித அலட்சியமும் லேசான சிரிப்பும் முதலில் தோன்றினாலும், நானே அவருடைய இடத்திலிருந்து இன்னொருவருக்குக் கதை சொல்லிக் கொண்டு வருவதைப்போல உணர்ந்தேன்.

விழுப்புரத்திலிருந்து விருத்தாசலத்திற்கு என்னுடைய பணியின் காரணமாக அன்றாடம் ரயிலில் பிரயாணம் செய்கிற பயணியான நான், என்ன காரணத்தாலோ என் எதிரேயிருந்த இருக்கையில் சன்னலோரம் உட்கார்ந்து வந்துகொண்டிருந்த என்னுடைய கதை சொல்லியிடம், “சென்னையிலிருந்து வர்றீங்களா?” என்று கேட்கப் போய் எங்களுடைய உரையாடலும் இந்தக் கதையும் பிறந்து நீங்கள் வாசிக்கும்படி வளர்ந்துகொண்டே வந்தது. வேதனை தீர்ந்த மலர்ச்சியோடும், உற்சாகம் பொங்கும் முகத்தோடும் என்னிடமும் என் மூலம் உங்களிடமும் சொல்லிக்கொண்டு வருகிறார் என் நண்பரான கதைசொல்லி.

பத்து நாட்களாகி விட்டது, அவன் மலம் கழித்து. இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இது ஒரு மலச்சிக்கல் கதை என்று. சற்று முகத்தைக் கூட சுளிப்பீர்கள். மலம் கழிப்பது உயிரினங்களின் மிக அத்யாவசியமான செயல்பாடுகளில் ஒன்று என்பதை இரண்டுநாள் மலம் போகாமல் முக்கி முக்கி வயிற்றுத் தசைகள் இறுக குதவாயைக் கிழித்துக் கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட வெளிக்கிருந்து முடிந்த பின்பும் நடக்க முடியாமல் உட்கார முடியாமல் கடுகடுப்பு தோன்றி கண்களுக்கு முன்னால் தெரிகிறவரையெல்லாம் கடித்துக் குதறிவிடலாம் போல கோபமும் எரிச்சலும் பொங்க அலைந்தவர்களுக்கும், அலைந்து கொண்டிருப்பவர்களுக்கும் தெரியும் தினசரி மலம் கழிப்பதின் அருமையைப் பற்றி. உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது? சரி கதைக்கு வருவோம்.

ஒரு ஆளுக்கு மலச்சிக்கல் என்றாலே இத்தனை எரிச்சலும் கோபமும் கிளம்புகிறது என்றால் ஒரு நகரத்திற்கே அதுவும் மாநகரத்திற்கே மலச்சிக்கல் என்றால் எப்படியிருக்கும். யோசித்துப் பாருங்கள். திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த உலகநாதனுக்கு முதலில் அப்படித்தான். வந்து ஒரு வாரத்தில் சென்னையில் அவனுக்கு நேர்ந்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் அப்படித்தான் இருந்தன. பரபரப்பும், பொறுமையின்மையும், அலட்சியமும், கோபமும், படபடப்பும், எரிச்சலும் எல்லோர் முகத்திலும் அஞ்சலக முத்திரைபோல குத்தப்பட்டிருந்தது. முக்கி வெளிக்கிருக்கும்போது இரத்தம் தேங்கிய சுளித்த முகம் அப்படியே நிரந்தரமாய் தங்கிவிட்டது போன்ற முகத்துடனே ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கூட திரிந்தார்கள். இன்னமும் முழுமையாகக் காலியாகாத மலப்பைகளைச் சுமந்துகொண்டு எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும் அங்கே மலம் கழிக்கும் ஆவலுடன் அதை அடக்கிக் கொண்டே சாலைகளில் அலைந்து கொண்டிருப்பதாக அவன் நினைத்தான். ஆனால் உலகநாதனுக்கே அப்படியொரு நிலைமை அதுவும் சென்னை வந்து ஒரு மாதத்திற்குள் வந்து விடும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை.

வேலையில்லாத பிரம்மச்சாரிகளின் எத்தனையோ புகலிடங்களில் ஒன்றான ஆர். கே. மேன்சனில் தங்கியிருந்த திருநெல்வேலி நண்பர் பரமுவின் தயவில்தான் சென்னை வந்ததிலிருந்து இருப்பிடம் பற்றிய கவலையின்றி இருந்தான். ஆனால் அதுவும் தலைமறைவு வாழ்க்கை போலத்தான். இந்த வார்த்தைகள் எல்லாம் அவனுடைய மொழி அகராதியில் கிடையாது. தினசரிப் பத்திரிகைகளில் குற்றவாளிகள் தலை மறைவு என்ற செய்திகளைப் படித்ததோடு சரி. அப்போதும் அது முழுமையாகப் புரிந்ததில்லை. ஆனால் சென்னைக்கு வந்தவுடன் புரிந்துவிட்டது. இ.பி.கோ.வின் எந்தப் பிரிவிலும் எந்தக் குற்றமும் புரியாத அவன் ஆர்.கே. மேன்சனின் சொந்தக்காரியான மூக்குமாமிக்குப் பயந்து தலைமறைவாய் அலைய வேண்டியதாயிற்று.

பரமுதான் எப்படியாவது ஒரு மாதம் தாக்குப் பிடித்தால் போதும், அதற்குள் வேலை கிடைத்து தலைமறைவு வாழ்க்கையிலிருந்து விடுதலையடைந்து சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபடி அதே மேன்சனிலோ அல்லது வேறு மேன்சன்களிலோ தங்கி சென்னை சாம்ராஜ்யத்தை ஆண்டு வரலாம் என்று ரகசிய சதியாலோசனை நடத்தி, கொரில்லா முறையில் மறைந்து தாக்கி மறைந்து முற்றுகைப் போர் நடத்தும் வழிமுறைகளையும் சொல்லியும் கொடுத்தான்.

அதன்படியே மேன்சனில் யாரும் எழுந்திரிப்பதற்கு முன்பே குறிப்பாக மூக்குமாமி எழுந்திரிப்பதற்கு முன்பே எழுந்து எல்லாவிதமான காலைக்கடன்களை கொடுத்து முடித்துவிட்டு மேன்சனை விட்டு வெளியேறிவிட வேண்டும். திரும்ப இருட்டிய பிறகு முகமறியா இருளில் வந்து அறையினுள்ளே முடங்கிவிட வேண்டும்.

மூக்குமாமியிடம் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். கொடையான கொடை கொடுத்து அவனை மட்டுமல்ல பரமுவையும் வெளியேற்றி விடுவாள். காலையில் ஆறுமணிக்குமேல் ஏழுமணிக்குள் எப்போது வேண்டுமானாலும் அந்த மேன்சனுக்குக் கீழ்ப்புறத்திலுள்ள ஒண்டுக் குடித்தனத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் பிரத்யட்சமாவாள்.

வெளியே வந்து கக்கூஸ், பாத்ரூம் போகிற இடைவழியில் உள்ள திண்ணையில் தன் பெருத்து தொள தொளப்பான உடலைச் சரிய விடுவாள். அப்படியே மேன்சனின் அறைகளிலிருந்து காலைக் கடன்களைக் கழிக்க வந்து செல்பவர்களை தன் புரையேறிய கண்களால் முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். திடீரென உரத்த குரலில், தண்ணீரை அதிகம் செலவழிக்காதே என்று ஆரம்பித்து பல ஆக்ஞைகளைக் காற்றில் விடுவாள்.

அந்தக் காற்றின் புளித்த வாடை கண்டு விலகிக்கொண்டு போய்விடுவார்கள் மேன்சன்வாசிகள்.

யாராவது தெரியாத்தனமாக பரிச்சயம் கருதி வழங்குகிற புன்னகைகளை வாங்கிக் கொள்ளமாட்டாள். உடனே தன் மாராப்பை இழுத்து விட்டுக்கொண்டே “இங்கே என்ன இளிப்பு… போவியா உன் வேலையை பாத்துகிட்டு…”

என்று கூப்பாடு போடுவாள். சிரித்தவனுக்கு ஏண்டா சிரித்தோம் என்று ஆகிவிடும். அதேபோல யாராவது ஏதாவது கோரிக்கைகளோ வேண்டுகோள்களோ அவளுக்கு முன்னால் வைத்தால், அவளுடைய பாரியான கால்களால் அதைக் குறிபார்த்து அவர்கள் முகத்திலேயே எத்திவிடுவாள். அவர்கள் அந்தத் தாக்குதலிலிருந்து தப்பித்துச் செல்வது துர்பலமே.

ஒரு வேளை மூக்குமாமிக்கு யார் பேரிலாவது சந்தேகம் வந்துவிட்டால் போதும். அந்த ஆளைக் கூப்பிட்டு குறுக்கு விசாரணை செய்து அவளுக்குத் திருப்தியானால்தான் விடுவாள். அல்லது மாட்டிக்கொண்டவரை ஜாமீன் எடுக்க அவருடைய பக்கத்து அறைக்காரர்கள்தான் வரவேண்டும். சில வேளைகளில் பாத்ரூம் பக்கமும் கக்கூஸ் பக்கமும் கூட ஒரு கிழட்டு யானையைப்போல உலா வருவாள். கக்கூஸிலிருந்து ஏதாவது புகை வந்ததோ… நாற வசவுதான்.

சென்னை வந்த முதல் வாரம் எந்தப் பிரச்சினையுமில்லை. அதற்குள் ஊர்ப்பக்கமிருந்து வந்திருந்த வேறு மேன்சன்களில் தங்கியிருந்த வேறு சில நண்பர்களும் அறிமுகமாகி விட்டனர். அதனால் சென்னை மாநகரத்தின் வாழ்வியல் நடைமுறைத் தந்திரங்களை ஒவ்வொன்றாய் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான். ஆனால் வினை வேறு விதமாய் வந்துவிட்டது.

எல்லோரையும் போல ஞாயிற்றுக்கிழமையன்று மூக்கு மாமியும் விடுமுறை எடுத்துக் கொள்வாள். ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமையன்று இஷ்டம்போல எழுந்து இஷ்டம் போல தங்களுடைய காரியாதிகளைச் செய்பவர்கள் இந்தப் பிரம்மச்சாரிகள். அதோடு சனிக்கிழமை இரவு விதவிதமான களியாட்டங்களில் மூழ்கி தங்களுடைய இடம்பெயர்தலின் துயரத்தை ஆற்றிவிட்டு வருபவர்களாகவும், நித்திரையின் சகல பரிணாமப் படிநிலைகளிலும் சஞ்சாரித்துக்கொண்டு இருப்பவர்களாதலால், பெரிய மனது பண்ணி ஞாயிறு மட்டும் மூக்குமாமி தன்னுடைய மேலாண்மையை மூக்கணாங்கயிறு போட்டு ஒண்டுக் குடித்தனத்திற்குள் அடக்கி வைத்திருப்பாள். திங்கள்கிழமை காலையில் அது வெகு உக்கிரமாய் பாயும் என்பது வேறு விஷயம்.

அப்படியான ஒரு திங்கள்கிழமையில் நடந்த விபத்துதான் இந்தக் கதைக்கே மூலகாரணம். முந்தினநாள் இரவு நடுச்சாமம் கழிந்த பிறகு நண்பனின் காதல் சோகத்தைக் கேட்பதற்காகக் குடித்த பீரின் அசதியில் சற்று கூடுதலாக உறங்கிவிட்டான்.

திடுக்கிட்டு விழித்து அவசர அவசரமாகக் காலைக் கடன்களைக் கழிக்க ஓடினான். இருள் பிரிந்து கொண்டிருந்த நேரம். அங்கேயிருந்த இரண்டு கக்கூஸ்களில் ஒன்றிலிருந்து சிகரெட்புகை குப்குப்பென்று வெளியேறிக் கொண்டிருந்தது. காலியாக இருந்த மற்றொன்றில் அவன் நுழைந்தான்.

உட்கார்ந்து முக்கிக் கொண்டிருக்கும்போது டமார் டமார் என்று அவனுடைய கக்கூஸ் கதவு தட்டப்படுகிற சத்தமும், அதே போல பக்கத்துக் கக்கூஸ் கதவு தட்டப்படுகிற சத்தமும் கேட்டது. அதோடு மூக்குமாமியின் கிழட்டுக்குரல்,

“யாருடாது… உள்ளேயிருந்து பீடி குடிக்கிறது… வெளியே வாங்கடா… இன்னிக்கு… உண்டு இல்லைன்னு பார்க்கிறேன்…”

என்று கர்ஜித்தது. அதைக் கேட்டதும் சர்வமும் ஒடுங்கி விட்டது உலகநாதனுக்கு. வெளிக்கிருக்கும் உணர்வே சட்டென்று கரண்ட் ஆப் ஆனமாதிரி மரத்துப் போய்விட்டது. பயத்தில் உடம்பு லேசாய் நடுங்கியது. ஏதோ சர்ரென்று உள்ளே போய் தொண்டையை அடைத்த மாதிரி ஒரு உணர்வு. அதோடு மறுபடியும் ஒரு தடவை கக்கூஸ் கதவை ஓங்கி ஒரு தட்டு தட்டிவிட்டு,

“வெளியே வாங்கடா… யாருன்னு காட்டறேன்… பேமானி…”

என்று கத்திக்கொண்டே போனாள். இப்போது உலகநாதனுக்கு எப்படி கக்கூஸை விட்டு வெளியேறுவது என்று தெரியவில்லை. ஆய் போகிற எண்ணமே அற்றுப் போய்விட்டது. அந்த ராட்சசி வழியில் இருந்தால் அவ்வளவுதான். ரொம்பநேரம் குத்தவைத்து உட்கார்ந்திருந்ததால் முட்டு ரெண்டும் கடுகடுவென்றிருந்தது. மெல்ல எழுந்து நின்றான். இப்போது எந்தச் சத்தமும் இல்லை.

சிறிது நேரம் கக்கூஸ் சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வாழ்க்கையில் இப்படியொரு இக்கட்டு வந்து சேரும் என்று எதிர்பார்க்கவில்லை. கொலைக் குற்றவாளி கூட கையில் அரிவாளுடன் சிரித்தபடி போஸ் கொடுக்கிற காலத்தில் வெளிக்கிருப்பதை ஒரு மாபெரும் குற்றமாக நினைத்து இப்படிக் கக்கூஸிலேயே பதுங்கும்படி ஆகிவிட்டதே. எல்லாம் அந்தப் பரமுவின் பாழாய்ப் போன காதலினால் வந்த வினை என்று சபித்துக் கொண்டிருந்தான்.

மேன்சன்வாசிகள் எழுந்து நடமாடும் ஓசையும், பல்துலக்கி வாய் கொப்பளிக்கும் ஓசையும் கேட்டது. திரைப்பட மெட்டுகளின் விசில் ஓசையும் கேட்டது. இவ்வளவு சுதந்திர உணர்வு இருக்கிறதென்றால் மூக்குமாமி அங்கே இல்லை என்று அர்த்தம். நைசாகக் கதவைத் திறந்து வெளியே வந்தவன், ஏற்கனவே பல் துலக்க வந்த இரண்டு பேரோடு ஒண்டிக் கொண்டு பரமுவின் அறைக்குப் போய் உடனே வெளியே கிளம்பிவிட்டான். மறுநாள் வேறு ஒரு நண்பரின் அறைக்குச் சென்று சிரமபரிகாரங்களைச் செய்துகொண்டான். மறுநாள் இன்னொரு நண்பரின் அறைக்குச் சென்றான். இப்படியே வேலை கிடைக்கும் வரை ஓட்டிவிடலாம் போலிருக்கிறதே என்றுகூட சந்தோஷப்பட்டான்.

மூன்று நாட்கள் கழிந்தபிறகு காலையில் அடிவயிற்றில் லேசான குத்தல் வலி. அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது மூன்று நாட்களாக வெளிக்கி போகவில்லை. இந்த ஞாபகம் வந்ததும் வலி அதிகரித்தது. ஆய் போனால் சரியாகிவிடும் என்று நினைத்தான். ஆனால் வெளிக்கி போகிற உணர்வே இல்லை. உடனே வெளியே போய் டபுள் ஸ்டிராங்காய் ஒரு காப்பியும் ஒரு வில்ஸ் பில்டரும் வாங்கிக் குடித்தான். குடித்து முடித்ததும் வந்து கக்கூஸில் உட்கார்ந்து பார்த்தான். டர்புர்ரென்று குசு போனது. அவ்வளவுதான். அதோடு வலியும் நின்றுவிட்டது. முக்கி முக்கிப் பார்த்தான். ஒன்றும் பிரயோசனமில்லை. சரி வலியாவது நின்றதே என்று ஆறுதலோடு எழுந்து வந்து விட்டான்.

அன்று இரவு அவன் தங்கியிருந்த அறை நண்பரிடம் தயங்கித்தயங்கி மெதுவாக விஷயத்தைச் சொன்னான். அவர் உடனே கொஞ்சமும் தயங்காமல்,

“இதெல்லாம் இங்க சாதாரண சப்பை மேட்டர்… ரெண்டு பர்கோலக்ஸ் வாங்கிப் போடு… காலைல பிச்சிக்கும்பா…”

என்றார். உடனே உலகநாதனுக்கு பெருத்த நிம்மதி ஏற்பட்டது. அன்று இரவே இரண்டு பர்கோலக்ஸ் மாத்திரைகளை வாங்கிப் போட்டான். மறுநாள் எந்த மாற்றமுமில்லாமல் காலை வந்து கழிந்தது. அன்று அலைய வேண்டிய இடங்களுக்கெல்லாம் அலைந்துவிட்டு சித்த வைத்தியக் கடைக்குப் போய் பேதிமருந்து வாங்கிச் சாப்பிட்டான். கொடுக்கும்போது மருத்துவரும் கடைக்காரருமாக டூ இன் ஒன் வேலை பார்த்தவர், ரொம்ப பவர்புல்லான மருந்து இது என்றும், ஒரு வேளை பேதி நிற்காமல் போய்க் கொண்டேயிருந்தால் என்னென்ன பிரயோகங்கள் செய்து பேதியை நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால் மறுநாள் எந்தப் பிரயோகங்களையும், பரீட்சித்துப் பார்க்கும் வாய்ப்பை அவனுக்குத் தராமலேயே அந்த பவர்புல்லான பேதி மருந்து வயிற்றுக்குள்ளாகவே சமாதியாகி விட்டது.

அவனது வயிற்றுக்குள் என்னதான் நடந்து கொண்டிருக்கிறதென்று தெரியவில்லை. கை வைத்தியமாக விளக்கெண்ணெய் குடித்துப் பார்த்தான். கண்களில் நீர்வழிய காரம் தின்றான். காலை மாலை இரண்டு வேளைகளிலும் கக்கூசுக்குத் தவறாமல் சென்று குறைந்தது அரைமணி நேரமாவது உட்கார்ந்து முக்கிமுக்கிப் பார்த்தான். ஏதோ சீல் வைத்து அடைத்து முத்திரை குத்தின மாதிரி சிறு அசைவும் இல்லை. ஏற்கனவே அவனுக்குள் வேர் விட்டிருந்த பயம் இப்போது கிளை விட ஆரம்பித்திருந்தது. நண்பர்கள் என்றில்லை, முன்பின் அறிமுகமின்றி முதல் முறையாக கேள்விப்படுகிறவர்கள் கூட இந்த நிலைமையின் பின் விளைவுகள் பற்றி அதிபயங்கரக் கற்பனைத் திறனோடு பேசினார்கள். உலகத்திலுள்ள அத்தனை நாடுகளிலிருந்தும் அவர்கள் எவ்வெப்போதோ படித்திருந்த கேட்டிருந்த செய்திகளை ரெபரன்ஸாக எடுத்துக் கூறினார்கள். இதனால் சென்னை மாநகர மேன்சன்வாசிகளுக்கு நல்ல கற்பனைத்திறன் வளர்ந்தது.

இப்போதெல்லாம் அவனைப் பார்த்தவுடன்,

“என்ன இன்னிக்காவது ஆச்சா?”

என்று கேட்பதை எல்லோரும் வாடிக்கையாகக் கொண்டனர். பல சமயம் பதிலைக் கூட எதிர்பார்ப்பதில்லை. உலகநாதனுக்கு தன்னுடைய உடற்கூறு இயக்கத்தில் ஏற்பட்டுள்ள, இந்த மாறுமையை சீர்படுத்த பல்வேறு வழிமுறைகளைக் கைக்கொண்டும் பயனில்லை. இந்தக் குகை திறக்க எந்த மந்திரச் சொற்களை உச்சாடனம் செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை.

அண்டாகா கசூம் அபூகா குசூம் திறந்திடு சீசே என்று எல்லாவிதமான மருந்துகளையும் அவன் வயிற்றுக்குள்ளே அனுப்பி வைக்க அதுவோ அண்டாகா கசூம் அபூகா குசூம் திறக்கமாட்டேன் மூசே என்று எல்லாவற்றையும் புதையல் போல தன்னுள்ளே சேர்த்து வைத்துக்கொண்டது. பீயை அடைகாக்கிற இந்த பூதத்தை அழிக்க அவன் யார் என்ன சொன்னாலும் செய்து பார்த்தான்.

கடைசியாக அரசு மருத்துவமனைக்குப் போய் மருத்துவரிடம் விஷயத்தைச் சொன்னான். அவர் வியப்பு கலந்த கேலியுடன்,

“என்னது. பத்து நாளாச்சா…” சிரித்தார்.

பின்பு இனிமா கொடுக்கும்படி அங்கிருந்த நர்சிடம் சொன்னார். நாற்றத்தின் கடலில் எல்லோரையும் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் ஆசுபத்திரி கக்கூஸிற்கு அருகிலேயே அவனுக்கு ஒரு பாயைக் கொடுத்து, இனிமா குழாயைக் குண்டியில் செருகினார்கள். இனிமா தண்ணீர் முழுவதும் இறங்கியதும் குழாயை உருவிக் கொண்டு போய் விட்டார்கள்.

ஒரு பத்து நிமிடம் கழிந்ததும் வயிறு லேசாக கடமுடா என்று சத்தம் கொடுத்தது. உடனே அருகேயிருந்த கக்கூஸிற்கு ஏழுகடல் தாண்டி உள்ளே போய் முன்னெச்சரிக்கையாய் உட்கார்ந்து கொண்டான். முக்கினால் உள்ளே போயிருந்த இனிமா தண்ணீர் மட்டும்தான் வெளியேறியது. வேறு எந்த அற்புதமும் நிகழவில்லை.

அவன் மருத்துவர் முன் மறுபடியும் நின்றான்.

அவர் கொடுத்த மருந்துக்கு மடங்காத அவனைக் குற்றவாளியைப்போல பார்த்தார். பின்பு எல்லாப் பரிசோதனைக் கூடங்களுக்கும், இந்த உசுப்பிராணியை ஆராய்ச்சி செய்யும்படி கட்டளையிட்டு சீட்டு எழுதிக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு வருகிற வழியில் தீர்க்கதரிசிபோல மற்றுமொரு நோயாளி அவனிடம்,

“தம்பி இங்கே இருந்தே… மலக்குடலை அறுத்து ஒரு டியூப்பைப் போட்டு விட்டுருவாங்க… அப்புறம் வாழ்க்கை முச்சூடும் கக்கூஸா அலைய வேண்டியதுதான்…”

என்று முன் உரைத்தார். அதைக் கற்பனை செய்யும்போது பீப்பையைச் சுமந்துகொண்டே அலைகிற தோற்றமும் நாற்றமும் தோன்றியது. உடனே மருத்துவமனையிலிருந்து தப்பித்துச் சென்றான். அவசர அவசரமாக ஒரு இருநூறு ரூபாய் பரமுவிடம் கடன் வாங்கிக்கொண்டு,

“இருக்கமோ சாகறமோ… ஊருக்குப் போய்டுவோம்…” என்று தனக்குள் சொல்லிக்கொண்டே ஊருக்குப் போவதற்கு ரயில் ஏறினான்.

கதை முடிந்துவிட்டதா என்று நானும் என்னுடைய கதை சொல்லி நண்பரிடம் கேட்க வாயெடுத்தேன். என் முகத்தை சில விநாடிகள் மௌனமாக பார்த்துக்கொண்டு இருந்தார். பின்பு மீண்டும் தொடர்ந்தார்.

அவன் ரயிலில் ஏறி உட்கார்ந்ததிலிருந்து பலவிதமான கற்பனைகள். குறிப்பாக மரணம் பற்றிய பயம். ஒரு வேளை இறந்து போனால் இது ஒரு விநோதமான மரணமாக அல்லவா மனித மரண வரலாற்றுப் பதிவேடுகளில் பதிவாகும். வெளிக்குப் போகாமல் ஒருவன் செத்தான். ஆனால் அவன் செத்த பிறகு துட்டி வீட்டில் யாராலும் இருக்க முடியவில்லை. ஒரே பீநாத்தம். பிணத்தை எரிக்கும் சுடலைத் தொழிலாளி பீநாத்தம் தாங்காமல் இடுகாட்டிலிருந்து ஓட்டம். இப்படி செத்தபிறகும் பீப்புகழோடு நெடுங்காலம் வாழவேண்டியிருக்குமே என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

அவனது இருக்கையில் கூனிக் குறுகி உட்கார்ந்துகொண்டு -வெளியே நகரத்தின் கோரமான புண்களைப் போன்று சிறிதும் பெரிதுமான கட்டடங்கள், எல்லாவற்றிலும் காமத்தைப் பணயமாக வைத்து பொருட்களை வியாபாரம் செய்யும் பிரம்மாண்டமான விளம்பர ஹோர்டிங்குகள், பூச்சிகளைப் போல, புழுக்களைப் போல நெளிந்து செல்லும் மனித யந்திரங்கள் என்று பார்த்துக்கொண்டே வந்தவனுக்கு அயர்ச்சியாக இருந்தது. உடல் இறுக்கமாகி விட்டது. உறுப்புகள் ஒவ்வொன்றும் அடைத்து மூடிக் கொண்டனவோ என்று நினைத்தான். கிறக்கத்தில் தலையைப் பின்னுக்கு சாய்த்தான். கண்களை மூடினான். எவ்வளவு நேரம் கழிந்தது என்றே தெரியவில்லை.

திடீரென்று, “அப்பாடா இப்பதான் நல்ல காத்தே வருது… தாம்பரம் தாண்டினாத்தான் நிம்மதியா மூச்சு விடமுடியும்…” என்ற குரல் ஒரு அசரீரியைப்போல அவனுக்குள் இறங்கியது. அவன் கண்களைத் திறந்தான்.

இதுவரை உறுத்தலாகத் தெரிந்த நகரத்தின் சுவடுகள் மறைந்து வயல்வெளிகள், கட்டாந்தரைகள், பொட்டல் காடுகளைக் கடந்து சென்று கொண்டிருந்தது ரயில். அப்போதுதான் அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவனுடைய அடிவயிற்றில் ஏதோ இளக்கம் கொடுத்த மாதிரி லேசான வலியுடன் ஒரு உணர்ச்சி கிளர்ந்தது.

அவன் அருகிலிருந்தவரிடம் ஏர் பேக்கைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கக்கூஸிற்குப்போய் உட்கார்ந்தான். அவ்வளவுதான். என்ன ஆனந்தம்… என்ன ஆனந்தம்… ஒரு அரை மணி நேரமாவது உட்கார்ந்திருந்து எல்லாவற்றையும் வெளியேற்றினான். அப்படிக்கூட சொல்ல முடியாது. எல்லாம் தானாக வெளியேறியது. ஒரு புதிய மனிதனாக அகமும் முகமும் மகிழ்ச்சி பொங்க வெளியே வந்தான்.

இதைச் சொல்லும்போதே என்னுடைய கதைசொல்லியின் முகத்தில் தாண்டவமாடிய மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும். அப்போதே புரிந்துவிட்டது. இந்த மாயாஜாலம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்று. விருத்தாசலத்திற்குள் ரயில் நுழைந்து கொண்டிருந்தது. நான் என்னுடைய கதைசொல்லியிடம் கை குலுக்கி வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு இருக்கையிலிருந்து எழுந்தேன்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 1 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

1 thought on “அண்டாகா கசூம்… அபூகா குசூம்…”

  1. DHANANCHEZHIYAN M

    நல்லவேளை உலகநாதன் ரயிலில் போயிருந்தான்.

    பேருந்தில் போய் இருந்தால் என்ன ஆயி… இருக்கும்….

    மு தனஞ்செழியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top
%d bloggers like this: