அடி

0
(0)

பஸ்ஸிலிருந்து இறங்கி, ஏதோ தன் தாயைப் பார்க்கிற மகிழ்ச்சி ததும்ப சுற்றுமுற்றும் பார்த்தான் நெல்லையப்பன். ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைத்து சாவதானமாக நடந்தான். அவனுக்கு மிக அருகில் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மழலையொலி கேட்கிறதோ, ஒரு கணம் புளகாங்கித உணர்வு பொங்கியது. போக்குவரத்தின் இரைச்சலும், நகரின் சத்தங்களும் எல்லாவற்றையும் விழுங்கிவிடும் பகாசுரனின் ஒற்றைக் குரலாக ஒலித்தது.

இந்தப் பிரயாணம் கூட தள்ளிப் போக வேண்டியதுதான். புறப்படுகிற வரையில் முத்துலட்சுமிக்கு அனுப்பி வைக்க மனமில்லை. குழந்தைக்கு உடம்பு சரியில்லை. தாலுகா ஆபீஸ் போய் வாக்காளர் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்க வேண்டும். தன்னால் தனியாக இருக்க முடியாது என்று என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தாள். பின்னால் கம்பெனியில் லீவு கிடைக்காதென்று, அவன்தான் பிடிவாதமாய் கிடைத்த இந்த சந்தர்ப்பத்தின் விரலை விடாமல் பற்றிக்கொண்டு பஸ் ஏறிவிட்டான்.

இத்தனைக்கும் நெருங்கிய சொந்தமில்லை. ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மகள் திருமணம். உறவினர்கள் அனைவருமே எல்லா விசேசங்களுக்கும் பத்திரிகை அனுப்பத்தான் செய்கிறார்கள். அவன்தான் எதிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிடுவான். ஒவ்வொரு முறையும் அவன் திருப்பூரிலிருந்து வந்து போக முடியுமா? நினைத்த நேரமெல்லாம் லீவு கிடைக்குமா? ஆனால் இந்த மூன்று மாதங்களாகவே சிறுவயது ஞாபகங்கள் ஊற்று போல பொங்கிக் கொண்டேயிருந்தது. அதற்கு ஒரு காரணம் அவன் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே குறுக்குத் துறை சுப்பிரமணியன் மூன்று மாதங்களுக்கு முன் வந்து சேர்ந்திருந்தான். அவனிடம் ஊரைப் பற்றிப் பேசப்பேச அது அவனை பால்ய காலத்திற்குள் சிறகடிக்கவும், தாமிரபரணிக்குள் துள்ளிக் குதிக்கவும் வைத்தது. அவன் எப்போதும் ஊரைப் பற்றியும், பழைய நண்பர்களைப் பற்றியும், பழைய சம்பவங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த முத்து லட்சுமி கூட,

“என்ன ஐயாவுக்கு நெல்லைச் சீமை நெனப்பு நெதசரி வருது… வேறெதும் சங்கதியா…”

என்று கிண்டல் செய்தாள். எவ்வளவோ விஷயங்கள் இருக்கத்தான் செய்தன. எல்லாவற்றையும் சொல்லி விளங்கவைக்க முடியுமா இல்லை சொல்லில் விளக்க முடியுமா. ஆற்றுக்குப் போகிற வழியில் இருந்த அக்ரகாரத்தில் அவனது பால்ய கால சிநேகிதி கோதையை மறக்க முடியுமா. தாத்தாவும் ஆச்சியும் கொடிகட்டிப் பறந்த சிந்துபூந்துறை வீட்டைத்தான் மறக்கமுடியுமா. சாமியை, பாலுவை, உலகநாதனை, மாடசாமியை மறக்க முடியுமா.

எந்தத் தயக்கமோ கூச்சமோ இல்லாமல் ஏதோ தினசரி அலுவலகம் சென்றுவிட்டு வீடு திரும்புவதைப்போல பெரியதட்டாக் குடித்தெருவை நோக்கி நடந்து கொண்டிருந்தான். புதிய கட்டடங்களோ, பெரிய பெரிய விளம்பரங்களோ, நெரிசல் மிகுந்த போக்குவரத்தோ கூட அவனுக்கு எந்த வித்தியாசமான உணர்வையும் ஏற்படுத்தவில்லை. அங்கே முக்கில் டீக்கடையில் இருந்த மாஸ்டர் அண்ணாச்சி கூட அவனை அடையாளம் கண்டு சிரித்தமாதிரி இருந்தது. அவன் இந்த ஊர்க்காரன்தானே. தாமிரபரணியில் முங்காச்சல் போடாதவன் இந்த ஊரில் இருப்பானா. அவனும், சாமியும், உலகநாதனும் இன்னநேரம் என்று கிடையாது. எப்போது நினைத்தாலும் ஆற்றுக்குப் போய் குளிப்பார்கள். தடுமன் பிடித்தாலும் சரி. மூக்கில் சளி பச்சையாய் புல்லாக்கு போட்டுக் கொண்டிருந்தாலும் சரி. அம்மாவின் திட்டுகளும், அடித்தொடை கிள்ளல்களும் அவர்கள் ஆற்றுக்குப் போவதை நிறுத்தமுடிந்ததில்லை.

கள்ளன் போலீஸ், கண்ணாமூச்சி, கத்திச்சண்டை மல்லுக்கட்டு எல்லாமும் ஆற்றுக்குள்தான். அப்படித்தான் ஒரு தடவை அவனும் சாமியும் மல்லுக்கட்டும்போது சாமி வசமாக கழுத்தில் கிட்டிப்பிடி போட்டு தண்ணீருக்குள் அமுக்கி விட்டான். மூச்சுத் திணறி வாயை வாயைத் திறந்து நிறையத் தண்ணீரைக் குடித்துவிட்டான். கண்களைக் கட்டிக் கொண்டு வந்துவிட்டது. கை கால்கள் துடிக்கின்றன. அவன் போராட போராட சாமி விளையாட்டே குறியாய் மேலும் இறுக்குகிறான்.

திடீரென யாரோ கூப்பாடு போடுகிற சத்தம் கேட்டது. உடனே சாமியின் கால்களிலிருந்து கழுத்து விடுபட்டது. தண்ணீரிலிருந்து வெளியே வந்து வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் ஓங்கரித்து வெளியேறியது தண்ணீர். தாறுமாறாய் மூச்சு வாங்கியது. அவன் உடனே சாமிகூட சண்டை பேசாதே என்று சொல்லிவிட்டான். ஆனால் எப்படியோ அம்மாவுக்குத் தெரிந்துவிட்டது. உடனே நெல்லையப்பனிடம் விசாரித்தாள். அம்மா அடிக்கத்தான் போகிறாள் என்று பயந்ததற்கு மாறாக அவனைக் கூப்பிட்டு தன் மடி மீது உட்கார வைத்துக்கொண்டு,

“பயப்படக்கூடாதுடா… ஆறு என்னசெய்யும்… எல்லாம் அவ பிள்ளைகதானே. நம்ம உடம்புல ஓடுற ரத்தமே அந்த தண்ணிதானே… நாம இந்த உயிர் வேண்டாம்னு நெனச்சு உதறினாலொழிய அவளா எதுவும் செய்யமாட்டா…”

என்று சொன்னாள். அப்போது பேசும் குரல் அம்மாவின் குரல் போலவே இல்லை. எங்கிருந்தோ ஆழ்ந்த அமைதியிலிருந்து கிளம்பி வந்ததைப் போலிருந்தது. அப்போது அவனுக்கு அதொன்றும் புரியவில்லை.

ஆனால் தாத்தா முதலில் பின்பு கொஞ்சநாளிலேயே ஆச்சி என்று கருப்பந்துறைக்குப் போய் சாம்பலாகி தாமிரபரணியில் கரைந்த பிறகு திருநெல்வேலியில் ஒன்றுமில்லாமல் போய்விட்டது. வாழ்க்கையின் சுழிகளில் சிக்கி எங்கெங்கேயோ அலைக்கழிக்கப்பட்டு, திருப்பூரில் கரையொதுங்கினான். அவ்வப்போது சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது திருநெல்வேலி வரவும் ஆற்றில் ஒன்றுக்கு இரண்டு தடவையாய் குளிக்கவும் ஆரெம்கேவி ஜவுளிக்கடையில் வேலை பார்க்கிற உலகநாதனைப் பார்த்து பழைய நண்பர்களைப் பற்றி பேசவும் தவறுவதில்லை.

அப்படி ஒரு தடவை மாமாவின் வீட்டுக்கு வந்திருந்த சமயம், இரவில் ஆற்றுப்பக்கம் நடந்தான். அன்று பௌர்ணமி. ஆற்றுமணல் அத்தனை ஒளியுடன் மின்னிக் கொண்டிருந்தது. நிலவின் ஒளியில் அந்தப் பிரதேசமே கனவு மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அவன் காலடிச்சத்தம் கூட அந்த மோன நிலையைக் கலைத்துவிடுமோ என்று பயந்தான்.

ஆற்றின் கரையை நெருங்க நெருங்க பகலில் முணுமுணுவென்று ஓடிக் கொண்டிருக்கிற நீரின் ஒலி இப்போது அருவியின் பேரோசையாய் கேட்டது. அதைக் கேட்டதும் அவன் முதலில் திடுக்கிட்டுப் போனான். அந்தப் பேரோசை வேறெங்கிருந்தோ வானிலிருந்து இறங்கி வருவதைப்போல இருந்தது.

பகலில் பார்க்கும்போது இருந்த தோற்றத்திற்கும், இரவில் அதன் பிரம்மாண்டமான ஆகிருதிக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது. வேறு ஒரு பிறவியைப்போல. திரும்பிவிடலாமா என்று யோசித்தான். பேராச்சி, இசக்கி என்று படித்துறை சாமிகள் வேறு ஞாபகத்துக்கு வந்து கொண்டேயிருந்தன. தூரத்தில் தீயின் ஒளி. கருப்பந்துறையாக இருக்க வேண்டும். யாரோ ஒருவர் இந்த வாழ்க்கையின் அல்லல்களுக்கு முடிவுரை எழுதிப் போய்விட்டார்போல, மனசின் ஓரத்தில் பயம் கவ்வ மெல்ல கண்களை ஒரு தடவை நன்றாக மூடித்திறந்தான். மூச்சை நன்றாக இழுத்து உள்ளே நிறைத்தான்.

மெல்லிய குளிர்ந்த காற்று உடலெங்கும் உள்ளும்புறமும் நிறைந்தது. நிதானமாக, ஒவ்வொரு இடமாக உற்றுப் பார்த்தான். எல்லாம் பகலில் அவன் விளையாடிய இடங்கள்தான். அதோ அந்தப் பாறையில்தான் இன்று காலையில் துணிதுவைத்துக் குளித்தான். அந்தப் பாறை இப்போது பெரிய மலையைப்போல கண்களை மறைக்கிறது. ஒரு கணம் அவனுடைய பயத்தைக் கண்டு அவனுக்கே சிரிப்பு வந்தது. வெள்ளி இழைகளைப்போல தண்ணீர் நிலவின் ஒளியில் ஒன்றுக்கொன்று நூற்றுப் பின்னிக்கொண்டு ஓடியது. மீன்கள் சளப்சளப் என்று துள்ளிவிழும்போது மின்னலின் துளியொன்று தவ்விக் குதிப்பதைப்போல இருந்தது. பகலில் சொல்ல முடியாத ரகசியங்களையெல்லாம் இரவுக்குள் சொல்லி முடித்து விட வேண்டும் என்பதுபோல பேசிக் கொண்டேயிருந்தது ஆறு. அந்தக் குரலின் குழைவு அவன் மனசில் ஆனந்தத்தை நிறைத்தது.

அவன் ஆற்றில் காலை வைத்தான். ஒரு குழந்தையின் சிரிப்பொலி கேட்டது. அவன் கால்களில் மோதிய நீரின் சிரிப்பு. அவன் மெதுவாக நீருக்குள் கால்களை அளைந்தபடி அருகில் இருந்த பாறை மீது ஏறி உட்கார்ந்தான். அமைதி, பேரமைதி ஆற்றின் உரத்த சத்தம் மட்டும்தான். ஒரு அருவி தரை தொட்டு சிதறுவதைப்போல, வயதான பெரியவர்களின் குழறல் பேச்சுபோல, குழந்தைகளின் மழலைப் பிதற்றலைப்போல, ஆற்றிலுள்ள எல்லா மீன்களும் ஒரே குரலில் பாடிக் கொண்டிருப்பதைப்போல. அந்த சத்தத்தை எப்படி யோசித்தாலும் அப்படியே தோன்றியது. ஆனால் எதைப் போலவும் இல்லை அந்த சத்தம். அவன் அந்தப் பாறை மீது படுத்தான்.

கண்கள் நிறைய வானம். அப்படியே வானம் முழுவதும் அவன் மீது மட்டும் கவிந்த மாதிரி. கீழே அவனும் இந்த ஆறும், அதன் ஓசையும் மட்டும்தான். வேறு எதுவும் சாசுவதமில்லை. அவர்கள் இன்று நேற்றல்ல. ஆண்டாண்டு காலமாக இதே மாதிரி ஒருவருக்குள் ஒருவராக இருந்து கொண்டேயிருக்கிறார்கள். ஆறுதான் அவனை மனிதனாக்கியது. நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தது. காட்டுமிராண்டிகளாக கிழங்கு கனிகளைத் தின்றுகொண்டு அலைந்து திரிந்தவன் ஆற்றின் மடியில்தான் தன்னை உணர்ந்தான்.

இப்போது அவன் பாறையின் மீது இருக்கிறானா அல்லது பாறையின் கீழ் இருக்கிறானா. பாறை கூட மெத்தென்ற உணர்வைத் தரமுடியுமா. ஆற்றின் உரைவீச்சை அவன் கேட்டுக் கொண்டிருக்கிறானா அல்லது ஆற்றினுள்ளே அமிழ்ந்து அதனிடம் உரையாடிக் கொண்டிருக்கிறானா…  ஆறு பேசிக் கொண்டிருப்பதெல்லாம் அவனுக்காகத்தானா. அவனுக்குள்ளேயும் ஆற்றின் பேரொலி கேட்கிறதே. இதெல்லாம் கனவா மயக்கமா. இல்லை தரிசனமா. ஆறு தன் விசுவரூபத்தை இன்று அவனுக்குக் காட்டிவிட்டதா. அதன் மடியில் தன்னை மறந்த மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தான். அப்போது மனசில் ஏற்பட்ட நிறைவு அதன் பிறகு வாழ்வின் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்படவில்லை. தூரத்திலிருந்து அவன் பெயரைச் சொல்லி யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டது. உடனே தூக்கம் முழித்த மாதிரி காட்சியே மாறிவிட்டது. அவனைத் தேடி அவன் மாமா வந்து கொண்டிருந்தார்.

தாமிரபரணியை நினைக்கும் ஒவ்வொரு முறையும் இந்தத் தரிசனத்தின் நிழல் மனசில் படரும். உடனே ஒரு பரவச உணர்வு தோன்றும். அந்த உணர்வினைத் தேடியே தாமிரபரணியின் நினைவும் அடிக்கடி வரும்.

சித்தப்பாவின் மகள் திருமணத்தன்று காலையில் எல்லோருடனும் போய் ஆற்றில் குளித்துவிட்டு வந்தான். ஆறு பரிதாபமாய் ஒடுங்கி அந்திமக் காலத்தில் வற்றிச் சுருங்கிப் போன வயதான ஒரு ஆச்சியைப்போல இருந்தது. பல இடங்களில் ஆறாகவே ஓடாமல் ஒரு குட்டையைப் போல் தேங்கிக் கிடந்தது. பச்சைப் பசேல் என்று. ஒரு கவிச்சி வாடையுடன், வாயில் வைத்தால் ஒமட்டிக் கொண்டு வந்தது. எங்கே போனது ஆற்றின் வெள்ளி நிறம்? ஆனால் இதையெல்லாம் உற்றுக் கவனிக்கவோ யோசிக்கவோ நேரமில்லை. ஆட்களோடு ஆட்களாக அவசர அவசரமாகக் குளித்துக் கிளம்பிவிட்டான். வேறு யாருக்கும் வித்தியாசமாய் எதுவும் தோன்றவில்லைபோல. இது இப்படித்தான் என்கிற மாதிரி சாதாரணமாய் இருந்தார்கள்.

கல்யாணம் முடிந்து பொண்ணு மாப்பிள்ளை மறுவீட்டுக்கு மாப்பிள்ளையின் ஊரான கடையநல்லூருக்குப் போய்விட்டார்கள். மறுநாள் காலையில் அவன் ஊருக்குப் புறப்படுவதாக அவர்களிடம் சொல்லிக்கொண்டான். பூர்ணகலா தியேட்டரில் ஒரு சினிமா பார்த்தான். நகரத்தின் செயற்கையான ஒளி வெள்ளத்தின் வெக்கையும் புழுதியும் சேர்ந்து கசகசத்தது. ஜங்சனிலுள்ள நடைமேடை இட்லிக்கடையில் பழுத்த ஆச்சியின் கையினால் இட்லி தோசை வாங்கிச் சாப்பிட்டான். குடிக்க வைத்த தண்ணீர் கசந்தது.

“என்ன ஆத்துத் தண்ணியில்லையா… ஆச்சி…”

“ஆத்துத் தண்ணிதான் இந்த லட்சணத்துல இருக்கு…”

அவன் எதுவும் பேசவில்லை. சாப்பிட்டு முடித்துவிட்டு சிந்து பூந்துறை வழியாக ஆற்றை நோக்கி நடந்தான்.

தெருவிலிருந்து ஆற்றின் கரையில் இறங்கினான். நகரத்தின் வெளிச்சம் எதிரொளித்தது. மணலே இல்லை. இறுகிய தரையாக இருந்தது ஆறு. முன்பு ஒரு காலத்தில் மணல் இருந்ததற்கான அடையாளமே போல அங்கங்கே திட்டுத்திட்டாய் மணல் சிதறிக் கிடந்தது. ஆற்றுக்குள்ளே நடக்க நடக்க வளர்பிறை நிலவின் ஒளி மெல்லிசாக படர்ந்திருந்தது தெரிந்தது. வேலிக்கருவை மரங்கள் அடர்ந்திருந்தன. அவன் எதையும் கவனிக்கவில்லை. அவனுக்குள் அதே பழைய பரவச உணர்வு குமிழியிட்டது. ஆற்றைத் தேடி ஆற்றுக்குள்ளேயே ரொம்ப தூரம் நடந்து விட்டான். ஆற்று நீரின் குசுகுசுப்பு கூட கேட்கவில்லை.

திடீரென அவனுக்கு முன்னால் ஒருவன் வந்துநின்றான். எங்கிருந்து வந்தான். எப்படி வந்தான் என்று தெரியவில்லை. அவன் திடுக்கிட்டுப் போனான். இருளைப் போர்வையாய்ப் போர்த்தியிருந்தான். முகம் சரியாகத் தெரியவில்லை. வந்தவன், அவனைப் பார்த்து,

“என்ன?”

என்றான். அந்தக் குரலின் உறுதி குடலை அறுத்தது. ஏதோ ஒரு அசட்டுத்தைரியத்தில் அவனும்,

“என்ன?”

என்றான். ஏதோ அவன் கேட்ட கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டதைப்போல வேகமாக அந்த இருள் உருவம் சென்று விட்டது. அப்போதுதான் கவனித்தான் அந்த உருவத்தின் கையில் ஒரு ஆளுயரக் கம்பு இருந்தது.

ஆற்றின் நீரருகில் ஒரு பெரிய பாறையில் சென்று உட்கார்ந்தான். ஆற்றை உற்றுப்பார்த்தான். தண்ணீர் ஓடுவதே தெரியவில்லை. ஒரு சாக்கடை ஓடுகிறபோது கேட்கிற சத்தத்திற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. க்ளக் க்ளக் என்று நீண்ட இடைவெளி விட்டு கேட்டுக் கொண்டேயிருந்தது. பாறையின் கீழே இறங்கி இறங்கி தண்ணீரைத் தொடுவதற்காகக் கால்களைத் தொங்க விட்டான். இப்போது பாதத்தைத் தொட்டுக்கொண்டு தண்ணீர் ஓடியது. உறைந்த பனியைப்போல இறுகி ஓடியது தண்ணீர். அவன் அரைகுறை இருளில் எதிரே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது அவன் காலை யாரோ வெடுக்கென்று பிடித்திழுப்பதுபோல இருந்தது. தன்னிச்சையாகவே கால்களை உயரே இழுத்துக் கொண்டான். மீன்கடி மாதிரி தெரியவில்லை. அப்படியே உட்கார்ந்துகொண்டு தண்ணீரை உற்றுப் பார்த்தான். வித்தியாசமாய் எதுவும் தெரியவில்லை. மீன்களாய்தான் இருக்கும்.

மறுபடியும் தயங்கித் தயங்கி கால்களைத் தொங்கவிட்டான். என்ன ஆயிற்று? கலகலத்து சளசளவென்று பேசிக் கொண்டேயிருந்த ஆறு எங்கே?

அமைதியான சவஊர்வலம்போல கனத்து ஓடிக் கொண்டிருக்கிறதே. இங்கேயுள்ள காற்றும் இருளும் கனத்து ஆளை அமுக்குகிற மாதிரி இருக்கிறதே. இதைப் பார்ப்பதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் இரண்டு கால்களையும் யாரோ பிடித்திழுப்பதுபோல இருந்தது. அவன் கைகளால் பாறையை அப்படியே பற்றிக் கொண்டான். ஆனாலும் ஒருத்தர் அல்ல பத்திருபது பேர் சேர்ந்து இழுப்பதைப்போல இருந்தது. அவன் நிலை தடுமாறி தண்ணீருக்குள் விழுந்தான்.

பயத்தில் குரல் எழும்பவில்லை. அப்போதுதான் கவனித்தான். அவனைச் சுற்றிலும் பல முகங்கள். எல்லாம் வாயை வாயைத் திறந்து மூச்சு விட முடியாமல் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தன. தண்ணீருக்குள்ளிருந்து குரல்கள் கதறின. பெண்கள் குழந்தைகளின் அழுகை.

“ஐயா என்ன விட்டுடுங்க… அடிக்காதீங்க…”

“நீச்சல் தெரியாது… என்னைய காப்பாத்துங்க…”

“ஐயோ எம்பிள்ள… எம்பிள்ள…”

மடார் மடாரென்று தண்ணீரில் கம்பால் அடிக்கிற சத்தம் கேட்டது. “ஐயோ அப்பா… அம்மா… என்னய காப்பாத்துங்க…” என்ற குரல்கள் தெளிவாகக் கேட்டன. கைக்குழந்தையை அணைத்தபடி முங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் கைகள் கடைசியாய் தண்ணீருக்குள் துழாவிக் கொண்டிருந்தன. குழந்தை எப்போதோ தன் கடைசி மூச்சை விட்டிருந்தது. தலையில் விழுந்த அடியால் முகம் முழுவதும் ரத்தம் வழிய முங்குவதும் எழுவதுமாக இருந்து மெல்ல மூழ்கியது.

மரண ஓலங்களும், கூச்சலும், கூப்பாடும், இடைவிடாமல் கம்பால் தண்ணீரில் அடிக்கிற சத்தமும் கேட்டுக் கொண்டேயிருந்தன.

ஒவ்வொரு பிணமாகத் தண்ணீரில் மிதந்தது. அந்த முகங்கள்… அதிலிருந்த மரண வேதனை.

அந்த வேதனையின் உச்சத்தில் இரத்தம் உறைந்து இறுகிய உதடுகள். அந்த உதடுகளின் பிளவிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கேள்விகள். அவனுக்குத் தாங்க முடியவில்லை. வேர்த்துக் கொட்டியது.

தண்ணீரிலிருந்து வெளியே வந்தான். சுற்று முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. எல்லாமே விசித்திரமான காட்சிபோல இருந்தது. நிமிர்ந்து பார்த்தான். பாலத்தின் மீது நகரம் வழக்கம்போல இயங்கிக் கொண்டிருந்தது. மனதில் பெரிய பாறை நசுக்குவது போலிருந்தது. எழுந்து போய் விடலாம் என்று நினைத்தான். கைகளிலும், கால்களிலும் உள்ள தண்ணீர் காயாமல் ஈரப்பிசுபிசுப்பாய் இருந்தது. இரத்தக் கவிச்சி வாடை அடித்தது.

அவன் திரும்பி நடக்கத் தொடங்கினான். அப்படித் திரும்பும்போதுதான் கவனித்தான். அவனுக்குப் பின்னால் அந்த இருள் போர்த்தியவன் கையிலிருந்து கம்பை ஓங்கி அவனை அடிக்கத் தயாராய் நின்று கொண்டிருந்தான். அவ்வளவுதான். ஐயோ என்றலறியபடி ஆற்றிலிருந்து ஓட ஆரம்பித்தான். கண்மண் தெரியாமல் ஓடி தெருவில் ஏறுகிற சமயம் முதுகில் ஒரு அடி விழுந்தது. ‘யம்மா’ என்று துடித்து கீழே விழுந்து திரும்பிப் பார்த்தான். பின்னால் ஒருவரும் இல்லை. தூரத்தில்தான் அந்த இருளைப் போர்த்தியவன் நின்று கொண்டிருந்தான். கம்பை ஓங்கியபடியே.

உண்மையிலேயே பயந்து போனான். இரண்டு தெரு கடந்து வந்த பிறகுதான், சுயநினைவு வந்தது. நடந்ததெல்லாம் கண்முன்னே ஓடியது. அவனுக்கு எதுவும் புரியவில்லை, என்னதான் இந்த ஊரில் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரியவில்லை. முதுகில் விழுந்த அடி விண்விண்ணென்று தெறித்தது. சட்டையைக் கழட்டி முதுகை விரல்களால் தடவிப் பார்த்தான். ஒரு கம்பின் தடம் பதிந்து தடிப்பு விழுந்திருந்தது. தொட முடியவில்லை. அப்போது எதிரே சட்டை போடாமல், கழுத்தில் துண்டை வல்லவட்டாக போட்டுக்கொண்டு வந்தார் ஒருவர். அவர்,

“என்ன தம்பி… ரொம்ப வலிக்குதா? பாலத்துக்கு கீழே கடைசியில் சு.ர.ந.வே. காந்திமதி அண்ணாச்சி கடையில் நூறு அல்வா வாங்கிச் சாப்பிடுங்க… எல்லாம் மறந்திரும்… சரியாப் போயிரும்… கொஞ்சம் மிச்சரும் ஓசிக்கு தருவாரு… கொஞ்சநாள்ல மரத்தும் போகும்… அப்புறம் தழும்பு மட்டும்தான் இருக்கும்… இங்க பாருங்க…”

என்று தன் முதுகைக் காட்டினார். அவர் முதுகிலும் கம்பின் தடம் பதிந்த தழும்பு கிடந்தது.

“கவலைப்படாதீக… தம்பி… ஊரில எல்லாப் பயலுக முதுகிலயும் இந்தத் தடம் கெடக்கு… அதனால பொண்ணுகிண்ணு கெடைக்காமப் போயிருமோன்னு பயப்படாதீக…” என்று சொன்னவர் தன் ஹாஸ்யத்தைத் தானே ரசித்தவர்போல சிரித்துக்கொண்டே போய்விட்டார்.

அவனுக்குக் காய்ச்சல் வந்துவிடும்போல முதுகில் வலித்தது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top