அங்கீகாரம்

4
(1)

வாசலில் செருப்புகளின் சரசரப்பு கேட்டது. யாரோ ஆறு படிகளையும் தாண்டி வருவதாக்கான களேபரங்கள் சூழ்ந்தன.

அந்த அகால வேளையில் யார் வருகிறார்கள் என்று பார்க்கவொண்ணாது எல்லாரும் சிலையாகியிருந்தார்கள். தாங்கள் தீர்மானித்துவிட்ட ஒருவரின்  வருகையாய்  எல்லார் மனசும் அடித்துக் கொண்டது.

செருப்பைக் கழற்றி மூலையில் தள்ளிவிட்டு கூடத்திற்கு வந்தாள் வானதி. வீடு முழுதும் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளும் அதில் சிரத்தை கொள்ளாது, கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டு பதை பதைப்புடன் அவர்கள் அமர்ந்திருப்பதும் ஒரு கணம் அவளுள் சலன மேற்படுத்தினாலும் உடனே, தெளிந்து கொண்டாள். தான் எதிர்பார்த்தது இந்த அளவிற்கு பூதாகர உருவெடுக்கும் என்று அவள் கருதவில்லை.

எல்லார் கண்களும் அவளையே வெறி கொண்டு பிறாண்டுவதைப் போலிருந்தது. அந்தக் கண்களில் பயமும், ஏதோ ஒரு வகை வன விலங்கைக் கண்டுவிட்ட நடுக்கமும் இழையோடியது. ஏககாலத்தில் பேச விரும்புவதைப்போல் எல்லா உதடுகளும் மெலிதாய்த் துடித்தன.

மூலைக்கொருவராய்ச் சிதறிக் கிடப்பதாய்த் தோன்றிய அவர்களின் மத்தியில் போய் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தாள். யாரேனும் தன்னைக் கேள்வி கேடக்ககூடும் என்று எதிர்பார்ப்பதைப் போலும்-விரும்பியதைப் போலும். எல்லாரும் ஒரு சேர மௌனம் சாதித்தனர். ‘இன்று இவர்களுக்கு என்னவாயிற்று? ஏன் இப்படி எல்லாரும் பிரமை பிடித்தவர்கள் போல் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்?’ அவளுள் ஒப்புக்காகத்தான் இவ்வெண்ணங்கள் ஓடின. ஆயினும் உண்மை நிலை புரியாமல் இல்லை.

பாத்ரூமில் போய் முகம் கழுவினாள். வட்டிலில் சோற்றைப் போட்டுக்கொண்டு, தன்னிச்சையாய்ச் சாப்பிட்டுவிட்டு கூடத்திற்கு வந்தாள்.

கணேசன் அவளைத் திரும்பிப் பார்த்தார். பிரகாசமான விளக்கொளியில் அவரின் ஏறிய நெற்றி ஜொலித்தது. அவர் எதையேனும் சொல்வாரென எதிர்பார்த்தவளாய் சற்று நேரம் நின்றாள். அம்மாவையும், தம்பி தங்கையையும் ஒருகணம் கூர்ந்து நோக்கினாள். அவர்களும் இவளிடம் பேசப் பயந்தவர்களைப் போல் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் பேசாததைக் கண்டு கொஞ்சம் வெறுமையுற்றவளாய் அங்கிருந்து நகர்ந்து போய், தேவையின்றி எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளை அணைத்து விட்டு மீண்டும் கூடத்திற்கு வந்தாள்.

அங்கு இன்னும் மௌனம் களையாமல் இருப்பதில் ஆத்திரம் கொண்டவள் போல் கத்தினாள். “இப்ப என்ன ஆச்சு.. எல்லாரும் இப்படி கல்லா சமைஞ்சுருக்கீங்க…?”

கணேசன் கொஞ்சம் நிதானமாய் அவளை நோக்கினார். “கூட்டமெல்லதம் முடிஞ்சிருச்சா…?” சிரமப்பட்டு கோபத்தை குறைத்திருப்பதை அவர் முகம் காட்டியது.

“ம்…ம்…” வானதியின் அறைகுறை பதிலால் எரிச்சலுற்ற ஸ்ரீமதி வீறிட்டெழுந்தாள். “என்னடி! வுந்தே! முகாராணி மாதிரி மூஞ்சியக் கழுவின… சாப்பிட்டே… இப்ப இங்க வந்து கத்துற… ஓ மனசுல என்னடி நெனைச்சுக்கிட்டு அலையுறே… பெரிய இந்திரா காந்தின்னு நெனைப்போ…?” குரலில் வன்மம் மிகுந்தது.

“அப்படியெல்லாம் ஒரு நினைப்பு வரவே வேணாம்மா…” அமைதியாகச் சொன்னவள் அப்பாவைப் பார்த்துக் கொண்டு “என்னப்பா நீங்களும் இந்த நவீன காலத்துல… அம்பது வருஷத்துக்கு முந்தி இருந்த நெலமையே இன்னிக்கும் நீடிக்கணும்கிற மாதிரி.. நீங்களாவது கொஞ்சம் புரிஞ்சு வெவரம் சொல்ல வேணாம்…?”

ஆம்மா சினத்துடன் குறுக்கிட்டள். “இருடி.. என்ன அவர் பக்கம் தாவுறே… அவருதே சின்ன வயசுலருந்து செல்லங் கொடுத்தே ஒன்னயக் கெடுத்துக் குட்டிச் சொவராக்கிட்டாரே… இப்பவும் அவரச் சரிக்கட்டி நியாயம் தேடப் பாக்குறியா?” என்றவள் கொஞ்சம் இறங்கிய குரலில், “கல்யாணம் பண்ண வேண்டிய வயசுல இப்படித் தான் தோன்றித்தனமா அலையுறே. இப்படி திரிஞ்சேயின்னா நாளைப்பின்ன எவன் ஒன்னயக் கல்யாணம் பண்ண வருவான்…? ஏண்டி ஏ வகுத்துல நெருப்பள்ளிக் கொட்டுற…” அவள் கண்களில் நீர் பீறிக்கொண்டிருந்தது. முந்தானையில் ஒற்றியெடுத்துக் கொண்டே, “ஆளான பொண்ணுக வீட்டுப்படி தாண்டக் கூடாதுன்னு சொல்லுவாங்க… நீ என்னடின்னா மேடையேறிப் பேசிட்டு வந்திருக்க! ஒழுக்க சலுக்கமா வாழ்றப்பவே கன்னா பின்னான்னு பேசுற ஒலகத்தப் புரிஞ்சிக்கிறாம இப்படிப் பண்றயேடி… ஒரு தாய் மனச இப்படி வேக வைக்கிறயேடி… ஒனக்கே இது நல்லாருக்கா…?” லேசான கேவலுடன் அழுகை பீறிட்டது.

கணேசன், தனக்கும் சேர்ந்து மனைவி பேசுவதாய் அமைதி கண்டிருந்தார். அதோடு தனக்கு உடன்பாடானதை மனைவி கேட்பதாய் ஒரு வித நிறைவு.

வானதி மூத்த பெண்ணாகையாலும, அவள் பிறந்து நான்கு வருஷங்களுக்குப் பின்னால் மற்றவர்கள் பிறந்ததாலும் கணேசன் அவள்மேல் அளவிலாப் பிரியம் கொண்டிருந்தார். இயல்பாகவே தலைப்பிள்ளை மேல் பெற்றோர் கொண்டிருக்கும் பிரியம் அவருக்குமிருந்தது. அவள் விரும்பியதை இளமை தெட்டே பூர்த்தி செய்தும் அவள் சிணுங்கள்களுக்கெல்லாம் வருந்தியும், அவளது கோபத்திற்கெல்லாம் பணிந்தும் நாள் கழிந்ததினால் இன்றைய நிலையில் அவளைக் கண்டிக்கும் தெம்பு குறைந்திருந்தது.

ஸ்ரீமதியைப் பொருத்த வரையிலும் வானதி மேல் பிரியம் கொள்ளாமலில்லை. மூன்று பிள்ளைகளின் மேலும் சம பங்காய்ப் பிரியம் கொண்டிருந்தாள். தான் கருதிய வண்ணம் அவர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்பதிலும், தனது சொல்லுக்கு எதிர்நிலை வகிக்காமல் அவர்கன் இருக்க வேண்டும் என்பதிலும் அவன் உறுதியாயிருந்தாள்.

இதற்கிடையில் மூத்த மகள் கைமீறிப் போய்விட்டதாய் அவளுள் வேதனை மிகுந்தது.

“இது என்னம்மா.. நீ..! பெரிய வேடிக்கையாயிருக்கு. நா என்ன பண்ணிட்டேன்னு இப்படிக் கேவறே? இன்னும் பர்தாக்குள்ளயே மொடங்கியிருக்க ஏம்மா நெனைக்கிறே…? இந்தத் தாழ்ந்த நெனைப்பாலதா நாமெல்லாம் கோழையாகிக் கெடக்கோம்..” தனக்கு உபதேசிப்பது போல் மகளின் வார்த்தைகள் இருந்ததும் ஸ்ரீமதிக்கு முன்னிலும் பல மடங்காய் கோபம் கொப்பளித்தது. “நான் போட்ட குட்டி, நீ எனக்கே உபதேசம் பண்ண வந்துட்டியா..? நா சொல்றத நீ கேளு! நீ சொல்றதக் கேட்டு நா ஒன்னும் நடக்க வேண்டியதில்ல.. நாலெழுத்து படிக்க வச்சதே நானு..”

“அம்மா! யாரு சொல்றத யாரு கேட்கணும்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா, நா சொல்றது உபசேமில்ல. உண்மை. இப்படியெல்லாம் வீண் ஜம்பங்கள்ல நாமெல்லாம் மொடங்கிக் கெடக்கோம்கிற ஆதங்கம்.. நீ ஒன்னுடைய கடமையச் செஞ்சே. நா என்னுடைய கடமையச் செய்ய வேணாமா? கல்வியறிவும் பெற்று சிந்திக்கவும் தெரிஞ்சு நாம ஞான சூன்யங்களா அமிழ்ந்து போயிடுறது நல்லதா? ஓன்னுடைய தலைமுறை பாழ்பட்டுப் போன மாதிரி இனிவரும் தலைமுறையும் போகனுமா? உண்மையக் கண்டு தெளிய வேணாமா? ஒருத்தருக்கொருத்தர் அடிமைங்குற நெலமய உருவாக்குறதுக்கு நமக்கு என்ன உரிமையிருக்கு..? அதைக் களைஞ்செறியறதுக்கு முயற்சிக்க வேணாமா? யாராரோ முயற்சிக்கிறாங்க நமக்கென்னன்னு இருந்தா இந்தக் கொடுமையெல்லாம் என்னிக்குத் தீர்றது…?”

அந்த நள்ளிரவில் அவளது பேச்சு இம்மியும் பிசகாமல் எல்லார் காதுகளிலும் பறையறைவதைப் போலிருந்தது. அப்பா எதையோ சொல்ல நினைத்துக் கொண்டு, சொல்லப் பிடிக்காதவராய் மௌனம் சாதித்தார். அம்மாவும், ‘அதிகப்பிரசங்கித்தனம்’ என்கிற மாதிரி கொஞ்ச நேரம் சும்மா இருந்தாள்.

“இப்படி மேடையேர்றாளே… பிரசங்கம் பண்றாளேன்னு கவலைப்படுறதுக்கு என்னம்மா இருக்கு? இது என்னிக்கோ நாம செய்து வைத்திருக்க வேண்டிய கடமை. நமக்கென உரிமைகள் சம அந்தஸ்தோட கெடைக்கிற வரைக்கும், நின்னு நெலைக்கிற வரைக்கும் போராடியே தீரணும்… பொண்ண பதுமை போல வச்சிருந்து காப்பாத்தி ஒருவங் கையில் ஒப்படைக்கிறதே கௌரவம், பெருமைன்னு நீ முடிவு கட்டியிருக்கிறதுனால இப்ப நா பண்றதெல்லாம் ஒனக்கு திகைப்பா, நடுக்கமா இருக்கும்.. இந்த நாட்டிலே எத்தனையோ சீரழிஞ்ச பொண்ணுங்களுக்காக வாதாடி அவர்களோட உரிமைக்குரலை எழுப்பி, அவர்களையும், உத்வேகத்தோட போராட அழைக்கிறதுதான் கௌரவம்னு நா முடிவு செஞ்சுட்டே.. அதுக்காக என்னுடைய கடமைகள்லருந்து தவறுவேன்னு நெனைக்காதே. நாளைக்கே எனக்குக் கெடைச்சுருக்க பட்டத்தைத்தூக்கிக்கிட்டு வேலை தேடி அலையவும் தயார். அந்த வகையில் இந்தக் குடும்பத்தையும் என்னால் காப்பாத்த முடியும்.. நா மாதர் சங்கத்துல செயல்படுறதும், அதனுடைய வளர்ச்சிக் கூட்டங்கள் பேசறதையும் ஆமோதிக்கிற, எனது உரிமைகளை நேசிக்கிற ஒருத்தர் எனக்குக் கணவனாக வரத்தா போறாரு.  நீ ஒன்னும் மனசப் போட்டுக் கொழப்பிக்க வேண்டியதில்லை..”

தான் பார்த்து வளர்ந்து, தன்னால் படிக்க வைக்கப்பட்டு, ஆளாகியிருக்கும் மகள், தனக்கு எதிர்ப்பாய், இந்த அளவுக்கு விஸ்வரூபம் கொண்டு வளர்ந்திருப்பதை எண்ணி ஸ்ரீமதி மனதுள் கலவரப்பட்டாள். ‘காலங்காலமாய் அடங்கி வாழ்ந்து விட்ட தனது பரம்பரையில் இப்படியும் ஒருத்தி முளைப்பாளா!’ என்று வேதனையுற்றாள். அவளை உயர்நிலைப் பள்ளியோடு நிறுத்தியிருக்காமல் காலேஜீக்கு அனுப்பி வைத்த கணவனை நோக்கி வெறுப்புடன் திரும்பினாள். “எல்லாம் நீங்க கொடுத்த செல்லம். இன்னிக்கு அவ இந்த அளவுக்கு போயிட்டா, நா அன்னிக்கே படிச்சுப் படிச்சுச் சொன்னே! அவளக் காலேஜீக்கு அனுப்பாதீங்கன்னு. கேட்டீங்களா…? இன்னிக்கு நல்லா அனுபவிங்க” கணேசன் மௌனமாய், மகளையும் சினந்து கொண்டிருக்கும் மனைவியையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

வானதி சொன்னாள். “அம்மா நீ நெனைக்கிற மாதிறி காலேஜீக்குப் போனதுனால மட்டும் இந்த எண்ணம் வந்திருக்குன்னு இல்ல, சின்ன வயசுலேர்ந்து இது ஊரிடுச்சு. அதோட, கண்ணு முன்னால நடக்கிற வரதட்சனைக் கொடுமைகளையும், கற்பழிப்புக் கொடுமைகளையும் பார்த்துக்கிட்டு எப்படியம்மா அமைதியாயிருக்க முடியும்? இத்தன சொல்றியே… போன வருஷம் பெரியம்மா மகளுக்கு என்ன நேர்ந்துச்சு? பேசுனதுல ரெண்டாயிரம் தரமுடியலேங்கிறதுக்காக வாழா வெட்டியா அனுப்பிடலயா? நாளைக்கு ஓ மகளுக்கே இந்த கதி நேராதுன்னு என்ன நிச்சயம்? எல்லாம் தனக்கு வந்தாத்தான் கவலையெல்லாம்னு நாம அலைஞ்சா என்னிக்கு விடிவு காண்றது? இந்த சமூகத்தில மொத்தமா புiயோடிக் கெடக்குற இது போன்ற இன்னும் பல கொடுமைகளையும் எப்படி அனுமதிக்கிறது? இதையெல்லாம் பாத்துக்கிட்டு கம்முனு இருக்கணும்னு நெனைக்கிறதே எவ்வளவு பெரிய அறியாமை!… இந்தப் பெண்ணடிமை எதிர்ப்பு, காலேஜ் படிப்புனால மடடும் வர்றதிலலம்மா. அனுபவப் படிப்புனால எல்லோருக்கும் வந்துக்கிட்டிருக்கு. இப்ப மாதர் சங்கத்துல இருக்கிறவங்கள்ல, எத்தனையோ பேரு படிக்காதவங்க, நீ நெனைக்கிற மாதிரி இல்லம்மா.. கொஞ்சம் நிதானமா சிந்திச்சா உண்மை விளங்கும்..”

ஒரு மைல் தொலைவிலிருக்கும் பஞ்சு மில்லிலிருந்து இப்போது பன்னிரண்டு முறை மணியொலித்தது.

உயர்நிலைப் பள்ளியில் கற்கும் குமாரும், ரேணுகாவும் உட்கார்ந்த இடத்திலேயே தூங்கி விட்டிருந்தனர்.

வாழ்க்கையின் மிக முக்கியமான எதிர்காலப் பிரச்சனையை அங்கே விவாதிப்பவர்கள் போல் மூவரும் விழித்திருந்தனர்.

மகளின் நிலை ஸ்ரீமதிக்கு இன்னும் உடன்பாடு ஏற்படுத்தவில்லை. மாதர் சங்க கூட்டங்களுக்கு மட்டும், மூன்று மாதங்களாய் மகள் போய் கொண்டிருந்ததால் பிரச்சனை இத்தனை வலுப்பெறவில்லை, அப்பொதிருந்தே கண்டிப்பை மிகைப்படுத்தியிருந்ததால் இன்று அவள் மேடையேறிப் பேசும் அளவுக்கு நிலைமை விபரீதமாய்ப் போய் விட்டிருக்காது என்று நினைத்தாள்.

மகளின் நிலையை விளங்கிக் கொள்வதற்காய் இதுகாறும் அமைதியைக் கடைபிடித்தவரைபபோல் தோன்றிய கணேசன்; மெதுவாக நகர்ந்து அவளருகில் வந்தார். “நான் வாழ்க்கைக்காகவும், கடை வருமானத்துக்காகவும் இதுவரைக்கும் போலி வேஷங்களாய்ப் போடடுட்டு வந்துட்டேன். என்னோட உத்வேகமெல்லாம் புத்தகங்களோட மொடங்கிப் போச்சு. அந்த வகையில எனது வெளிப்பாடா ஒன்னை நெனைக்கிறேன்” தெளிந்த நீரோடையின் நளினம் இழையோடியது. தனது நிலையை இதற்கு மேல் விவரிப்பது உசிதமல்ல என்பது போல் முடித்துக் கொண்டார்.

வானதிக்கு உற்சாகம் தாளவில்லை. சில நிமிடங்கள் வியப்பூரிய விழிகளால் தந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த அளவிற்கு அவர் இறங்கி வருவார் என்று அவள் கருதவில்லை. இருபத்தைந்து வருஷங்களாய் மளிகைக் கடை நடத்திக் கொண்டு தானுண்டு, தன் வேலையுண்டு என்றலைந்த அவரின் மனோ நிலையை இவ்வளவு நெருக்கமாய் அவள் அறிந்ததில்லை.

ஸ்ரீமதி திக்பரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். தந்தையும் மகளும் தனக்கு எதிர்ப்பாகி விட்டதால் மனதில் கொதிப்பு எழுந்தது. ஏதேதோ சொல்லி இருவரையும் வசைபாட நினைத்துக் கொண்டே இருந்தாள். ஆனால் ‘மெஜாரிட்டி’ குறைவால் என்னவோ சிலையாகியிருந்தாள்.

கொஞ்ச நேரம் அம்மாவையே ஆராய்ந்து கொண்டிருந்த வானதி எதையோ சொல்வதற்கு வாயைத் திறந்தாள். எனினும் நிறுத்திக் கொண்டாள். இதற்கு மேல் அம்மாவுக்குச் சொல்வதெல்லாம் அவள் சிந்திப்பதற்குரிய அவகாசத்தைக் குறைத்து விடும் என நினைத்தாள்.

குமாரையும் ரேணுகாவையும் அவரவர் படுக்கையில் ஒழுங்காய்த் தூங்கச் செய்து விட்டு தானும் படுக்கைக்குப் போனாள் வானதி.

தனது மனைவிக்கும் இந்த விஷயம் மெதுவாகத்தான் விளங்கும் என்று நினைத்தவராய், அவளைச் சமாதானம் செய்ய மனமின்றி தனது படுக்கைக்குப் போனார் கணேசன். கொஞ்ச நேரத்தில் அயர்ந்த உறக்கத்தின் அடையாளமாய் அவரின் குறட்டையொலி எழுந்தது.

அவர்கள் எல்லாம் தூங்கிய பின்னும், இரவு இரண்டு மணிவரை எதை எதையோ நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்த ஸ்ரீமதி கண்களைத் தூக்கம் தழுவ படுக்கையில் சாய்ந்தாள்.

பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும் போதுதானே தூக்கம் வரும்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top